தமிழ் நாட்டில் மதுவை ஒழித்துவிடவேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக எழுந்துள்ளது. இதற்காக மாநாடும் கூட்டப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலமான ஆந்திராவில் தாராள மது திட்டத்தை அந்த மாநில அரசு அமல்படுத்துகிறது.
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நேற்று அமராவதியில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலத்தின் புதிய மதுக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய கொள்கையில், அனைத்து பிராண்டு மதுபானங்களின் விலையையும் மாநில அரசு குறைத்துள்ளது. புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு ஆந்திராவில் உள்ள மக்கள் எந்த பிராண்ட் மதுபானத்தையும் வெறும் ரூ.99க்கு வாங்க முடியும். புதிய விதிகள் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஆந்திரப் பிரதேச அரசின் புதிய கொள்கை அமலுக்கு வந்த பிறகு, வாடிக்கையாளர்கள் 180மிலி பேக்கின் எந்த பிராண்டையும் வெறும் 99 ரூபாய்க்கு வாங்க முடியும். புதிய மதுக் கொள்கையை உருவாக்கும் போது தரம், அளவு மற்றும் மலிவு விலையை உறுதி செய்ய முயற்சித்ததாக ஆந்திரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் உள்ள மதுக்கடைகளுக்கு லாட்டரி மூலம் 2 ஆண்டுகளுக்கு உரிமம் வழங்கப்படும். இந்த கடைகள் திறக்கும் நேரத்தை நீட்டிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு ஆந்திராவில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மதுக்கடைகள் திறக்கப்படும்.
புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்துவதன் மூலம் ஆந்திரப் பிரதேசத்தின் வருவாய் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்குப் பெருகும் என ஆந்திர அரசு நம்புகிறது. இதனுடன், புதிய கொள்கையும் மாநிலத்தில் குற்றங்களை கட்டுப்படுத்த உதவும் என்று ஆந்திர அரசு கருதுகிறது. இந்த மாற்றம் மாநிலத்தில் மது கடத்தலை தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.