மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் மழை கொட்டியது. நேற்று இரவு புயல் தமிழக எல்லையை கடந்து ஆந்திரா நோக்கி சென்றது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் படிப்படியாக மழை குறையத்தொடங்கியது. இன்று மழை இல்லை. ஆனாலும் வெள்ளம் வடியவில்லை.
. இந்நிலையில் மிக்ஜம் புயல் இன்று காலை தெற்கு ஆந்திர பகுதியை அடைந்து, நெல்லூர்-மசூலிப்பட்டினத்துக்கு இடையே தீவிர புயலாக கரையை கடந்து வருகிறது. இதன் காரணமாக ஆந்திராவில் 8 மாவட்டங்களில் மழை , புயல் கோரத்தாண்டமாடுகிறது.திருப்பதி, நெல்லூர், பிரகாசம், பாபட்லா, கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கோண சீமா ஆகிய 8 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. திருப்பதி மலைப்பாதையில் ஏராளமான மரங்கள் புயலில் சாய்ந்தன. ஏற்கனவே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
ஏற்கனவே அங்கு பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் நிவாரணப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.