18வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ந்தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந்தேதியும், . 3-ம் கட்டமாக 93 தொகுதிக்கு கடந்த 7-ந்தேதியும் தேர்தல் நடைபெற்றது.
இதையடுத்து 4-வது கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. 96 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.
ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. கடப்பாவில் உள்ள புலிவெந்தலா வாக்குச்சாவடியில் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி வாக்களித்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளாக ஒரு ஆட்சியை நீங்கள் பார்த்துள்ளீர்கள். இந்த ஆட்சி நிர்வாகத்தின் மூலம் பயன்பெற்றதாக நீங்கள் கருதினால், உங்களின் எதிர்காலத்தை வளமாக்கும் ஆட்சி நிர்வாகத்திற்காக வாக்களியுங்கள்” என்று கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 5 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ள நிலையில், கந்தேர்பல் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள்.
தெலுங்கானாவில் உள்ள 17 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். ஹூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது வாக்கினை பதிவு செய்தர்.
நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.அங்கு தற்போது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 175 சட்டபை தொகுதிகளிலும், 25 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இதற்காக பிரபல நடிகரான பவன் கல்யாணுடன் கூட்டணி அமைத்தார் சந்திரபாபு நாயுடு.
அதேபோல் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுடனும் கூட்டணி அமைத்தார். கூட்டணி பேச்சுவார்த்தையின் அடிப்படையில், தெலுங்கு தேசம் 144 சட்டசபை தொகுதிகளிலும், 17 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அதேபோல் பவன் கல்யாண் கட்சியான ஜனசேனாவுக்கு 21 சட்டசபை தொகுதிகளும், 2 நாடாளுமன்ற தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 6 நாடாளுமன்ற தொகுதிகளும், 10 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. மற்றொரு முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணியும் களத்தில் உள்ளது.
பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது; ”மக்களவை தேர்தலின் 4வது கட்டமாக இன்று 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்தத் தொகுதிகளில் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள் என்றும், இளம் வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் தவறாது வாக்குகளை செலுத்துவார்கள் என்றும் நான் நம்புகிறேன். வாருங்கள், அனைவரும் நமது கடமையைச் செய்து நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.