கரூர் மாவட்டம், அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கும் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை சேர்ந்த பிரகாஷ் என்ற நபருக்கும் கடந்த பல ஆண்டுகளாக பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. பிரகாஷ் கடந்த 2018 ஆம் ஆண்டில் அன்புநாதனுக்கு 1 கோடி ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. பைப் கம்பெனி நடத்தி வரும் அதிமுக பிரமுகர் அன்புநாதன், தனது நிறுவனத்தில் பங்குதாரராக இணைத்துக் கொள்வதாக கூறி, பிரகாஷிடம் கடந்த 2020ஆம் ஆண்டு மீண்டும் 2 கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தைப் பெற்றுக் கொண்ட அன்புநாதன் நாட்கள் கடந்தும், அவரது நிறுவனத்தில் பங்குதாரராக இணைத்துக் கொள்ளாத காரணத்தால், பிரகாஷ் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு, கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அன்புநாதன் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க முடியாது என்று பிரகாஷை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், இன்று அன்புநாதன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
Tags:அன்புநாதன்