பாமக தலைவராக இருந்த அன்புமணி ராமதாசை நீக்கி விட்டு செயல்தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்படுவார், பாமகவின் தலைவராக இன்று முதல் தான் இருப்பேன் என அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் இன்று அறிவித்தார். இந்த அறிவிப்பு கட்சியின் வளர்ச்சிக்காகவும், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி அறிவிப்பதாகவும், மாற்றத்துற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதை இப்போது ஊடகங்கள் முன்பாக அறிவிக்க முடியாது, சிறுக சிறுக தெரிவிப்பேன் எனக் கூறினார்.
இந்நிலையில் பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாமக பொருளாளர் திலகபாமா, “பாமகவில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. ராமதாஸ் அய்யா இதுவரை எடுத்த எல்லா முடிவுகளும் சரியே, ஆனால் இந்த முடிவு தவறு. அன்புதானே எல்லாம்… அன்புமணியின் முடிவுக்காக காத்திருக்கிறேன். தனிநபர்களைவிட தலைமை பெரியது. தலைமையை விட இயக்கம் பெரியது. இயக்கத்தைவிட சமூகம் பெரியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.