பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ், இன்று அன்புமணியை அந்த கட்சித்தலைவர் பதவியில் இருந்து நீக்கியதுடன், அவரை செயல் தலைவராக மாற்றி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் அன்புமணி நீக்கப்பட்டதற்கு அந்த கட்சியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கட்சியின் பொருளாளரான திலகபாமா, ராமதாசின் நடவடிக்கையை கண்டித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
பாமகவில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை அய்யா எடுத்த முடிவுகள் சரியாக இருந்தது. ஆனால் இப்போது ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு உள்ளது. இது தவறான முடிவு இனி கட்சியில் எல்லாமே அன்புதானே.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இந்த நிலையில் அன்புமணி நீக்கத்தை கண்டித்து திண்டிவனத்தில் பாமக தொண்டர்கள் திரண்டு, ராமதாஸ் முடிவை கண்டித்து முழக்கமிட்டனர். அதே நேரத்தில் ராமதாசுக்கு ஆதரவாகவும் சில இடங்களில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
தன் பதவியை பறித்த ராமதாசின் நடவடிக்கை குறித்து அன்புமணி கருத்து எதுவும் சொல்லாமல் இருப்பதால், அவர் ராமதாஸ் முடிவை எதிர்த்து நடவடிக்கையில் இறங்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். எனவே தனக்கு மத்திய அரசுடன் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, கட்சி, சின்னத்தை அன்புமணி கைப்பற்றவும் வாய்ப்பு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.