Skip to content

அமித்ஷா வருகையும், அன்புமணி நீக்கமும்

  • by Authour

பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும்,  மத்திய உள்துறை அமைச்சருமான  அமித்ஷா இன்று இரவு 10.40 மணிக்கு சென்னை வருகிறார்.  நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவர் தமிழ்நாட்டில் உள்ள பல  அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்து கூட்டணிக்கு அச்சாரம் போட்டு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு   அன்புமணி ராமதாசும்  செல்ல இருந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் தான் இன்று  அன்புமணி பாமக தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார். அத்துடன் எந்த அதிகாரமும் இல்லாத செயல் தலைவராக அன்புமணியை நியமித்துள்ளதாகவும், இனி தானே கட்சியின் தலைவர் என்றும்,  கட்சியின் நிறுவனர்  டாக்டர் ராமதாஸ் இன்று அதிரடியாக பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

திடீரென இந்த  அதிரடி அறிவிப்பு ஏன் வந்தது  என்பது பற்றி கூறப்படுவதாவது:

கடந்த  நாடாளுமன்ற தேர்தலின்போது,   அதிமுகவுடன் கூட்டணி சேர  ராமதாஸ் முடிவு செய்தார். ஆனால் அன்புமணி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.  பாஜகவுடன் சேர்ந்தால் தான் , நான்  மத்திய அமைச்சர் ஆக முடியும். மேலும் சிபிஐ வழக்கும் தன் மேல் உள்ளது. எனவே  பாஜகவுடன் தான் சேர வேண்டும் என பிடிவாதமாக இருந்தார். இதற்கு  வேண்டா வெறுப்பாக ராமதாசும் ஒத்துக்கொண்டார்.

இறுதியில்  மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியே 40 இடங்களையும் கைப்பற்றியது.

இந்த நிலையில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி  புதுச்சேரியில் பாமக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவராக  தனது பேரன்   முகுந்தனை  ராமதாஸ் நியமித்து அறிவித்தார்.அன்புமணிக்கு உதவியாக அவர் இருப்பார் என்றார்.

பொதுக்குழுவிலேயே இதனை ஏற்க மறுத்த அன்புமணி,  அவரை ஏற்கமுடியாது. என்றார். இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ், இது என் கட்சி   நான்  சொல்வதை கேட்கவில்லை என்றால் இந்த கட்சியில் இருக்க முடியாது என்றார்.

இதனால் ஆத்திரமடைந்த அன்புமணி,  அவரை ஏற்கமுடியாது.  என் அலுவலகம் பனையூரில் இருக்கிறது. என்னை சந்திக்க வேண்டுமானால் அங்கே வாருங்கள் என்று கூறிவிட்டு மைக்கை மேஜையில் போட்டார்.

இப்படியாக பொதுக்குழுவிலேயே தந்தை, மகனுக்கு இடையே வாக்குவாதம் மோதல் ஏற்பட்டது. மறுநாள்  தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை  அன்புமணி சந்தித்து உள்ளார். அதன் பிறகு மோதல் போக்கு சமரசமாகி விட்டதாக அறிவிக்கப்பட்டாலும் அது நீறுபூத்த நெருப்பாகத்தான் இருந்து கொண்டு இருந்தது.

இந்த நிலையில் இப்போதும் அன்புமணி பாஜகவுடன் கூட்டணி வைக்க தீவிரமாக இருந்தார். இதை இப்போதும் ராமதாஸ் ஏற்கவில்லை.  பாஜக கூட்டணி தமிழகத்தில்  எடுபடாது.  அதிமுகவுடன் தான் நாம் கூட்டணி சேர வேண்டும். அதிமுகவே பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டது என்றால்   நமக்கு,  இன்னொரு மாற்று வழி இருக்கிறது. எனவே பாஜக வேண்டாம்  என்றார்.

ஆனால்  அன்புமணி, தனது எதிர்காலத்திற்கு  பாஜக தான் சாியாக இருக்கும். பாஜக தான் மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கிறது என்றார்.

இதனால் தான் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளை அன்புமணி, அமித்ஷாவை சந்திக்க  இருந்ததாக கூறப்படுகிறது. தலைவர் பதவியில் இருந்தால் தானே  உனக்கு அழைப்பு வரும்? தலைவர் பதவியை பிடுங்கி விடுகிறேன் என்ற ராமதாஸ்  அந்த பதவியை பறித்து விட்டார் என்று  பாமக  வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி உண்டா என்று கேட்டபோது, அது குறித்து  செயற்குழு கூடி முடிவு செய்யும் என்றும், 2026 சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த  இந்த முடிவு எடுக்கப்பட்டது ,  அன்புமணி நீக்கத்துக்கு பல காரணங்கள் உண்டு. அன்புமணி தேர்தல் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என இந்த முடிவு எடுக்கப்பட்டது. என்றும் ராமதாஸ் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.   வரும் மே 11ம் தேதி மாமல்லபுரத்தில் வன்னியர் மாநாடு  நடைபெறும்.  மாநாடு வெற்றி பெற மாநாட்டு குழுத் தலைவர் அன்புமணியுடன் இணைந்து அனைவரும் பணியாற்ற வேண்டும்  என்றும்  ராமதாஸ் கூறினார்.

அமித்ஷா தமிழகம் வரும் முன்னரே  பாமகவில்  இந்த மோதல் ஏற்பட்டுள்ளது தமிழக அரசியலில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

error: Content is protected !!