Skip to content
Home » அம்பானி மகன் திருமணம்….. பிரபலங்கள் வருகை…..மும்பை விழாக்கோலம்

அம்பானி மகன் திருமணம்….. பிரபலங்கள் வருகை…..மும்பை விழாக்கோலம்

  • by Authour

உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல இந்திய தொழில் அதிபருமான முகேஷ் அம்பானி-நீடா அம்பானி தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என்ற 2 மகன்களும், இஷாஅம்பானி என்ற மகளும் உள்ளனர். இதில் ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானியின் திருமணங்கள் மிகவும் ஆடம்பரமாக நடந்தன.

இந்தநிலையில் முகேஷ் அம்பானியின் கடைசி மகன் ஆனந்த் அம்பானிக்கும், பிரபல தொழில் அதிபர் விரேனின் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதில் உலகமே வியக்கும் வகையில் திருமணத்துக்கு முந்தைய வைபவங்கள் கடந்த மார்ச் மாதம் 3 நாட்கள் அம்பானி குடும்பத்தின் சொந்த ஊரான குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் நடந்தது. இதில் உலக பிரபலங்கள் உள்பட சுமார் 1,200 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
திருமணத்துக்கு முந்தைய வைபவங்கள் கடந்த ஒன்றரை ஆண்டாக அவ்வப்போது நடந்து வந்த நிலையில், ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமணம் இன்று  இரவு (வெள்ளிக்கிழமை)மும்பை பாந்திரா-குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்சன் சென்டரில் நடக்கிறது.

சுமார் 18.5 ஏக்கரில் உள்ள மும்பை ஜியோ வேர்ல்டு சென்டர், பிபா கால்பந்து மைதானத்தை விட 12 மடங்கு பெரியதாகும். நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட 10 மடங்கு பெரியதாகும். இதில் 5 அரங்குகள், 25 சந்திப்பு அறைகள் அடங்கி உள்ளது. இங்கு வெகு விமரிசையாக திருமண விழா நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) மணமக்களுக்கு விருந்தினர்கள் ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் திருமண வரவேற்பு நடக்கிறது. 14-ந்தேதி மங்கள் உத்சவ் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று நடைபெறும் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க ரியாலிட்டி டிவி நட்சத்திரங்கள் கிம் கர்தாஷியன் மற்றுஅவரது சகோதரி க்ளோ கர்தாஷியன் ஆகியோர் நேற்று மும்பை வந்தனர். அவர்கள் இருவருக்கும் நட்சத்திர ஓட்டலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த திருமணத்தில் பங்கேற்பதற்கான  அழைப்பிதழ், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் , தொழில் அதிபர்கள், வெளிநாட்டு அதிபர்கள்,  திரைநட்சத்திரங்கள் என  அனைத்து தரப்பினருக்கும்  வழங்கப்பட்டுள்ளது.

ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களுக்காக 100-க்கு மேற்பட்ட தனியார் விமானங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான வாடகை செலவு மட்டும் சுமார் ரூ.2 ஆயிரத்து 500 கோடி என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *