கரூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் 11 வயது சிறுவன் தனியாக இருந்ததை பார்த்து அரசு பேருந்து நடத்துனர் ஒருவர், அவனிடம் பேச்சு கொடுத்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், கரூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின் பெயரில் கரூர் பேருந்து நிலைய பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் விசாரணை அலுவலகத்திற்கு அருகில் இருந்த சிறுவனை
விசாரித்ததில், தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த கார்த்தி (11) என்றும், பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளான்.
மேலும், பேருந்து மூலம் நேற்று இரவு கரூர் வந்த சிறுவன் தனது அப்பாவின் பெயர் உதயகுமார் என்று மட்டும் கூறியதுடன், பெற்றோர்களின் செல்போன் எண் தெரியவில்லை என போலீஸாரிடம் கூறியுள்ளான். இதனையடுத்து கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை தொடர்பு கொண்டு சிறுவன் குறித்து விபரங்களை கொடுத்தனர்.
அதையடுத்து போலீசார் சிறுவனை அழைத்துச் சென்று சாப்பிட வைத்துவிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அங்கு சிறுவனின் பெற்றோர் குறித்து விவரங்களை சேகரித்து வருகின்றனர்.