Skip to content

“ஆம்ஸ்ட்ராங் உடலை மயான இடத்தில் தான் அடக்கம் செய்ய முடியும்” – நீதிமன்றம் .

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி வக்கீல் பொற்கொடி தரப்பில் சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு தொடர்பாக மாநகராட்சி கமிஷனர், எந்த பதிலும் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, இந்த கோரிக்கை தொடர்பாக அவசரமாக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க  வேண்டும் என பொற்கொடி தரப்பில் சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. அதன்படி, இந்த மனுவை தனி நீதிபதி ஒருவர் விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடம் நெரிசல் மிகுந்த பகுதி எனக்கூறி வரை படங்களை அரசு சமர்பித்தது. இதனைத்தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையின் போது, மயானம் என அறிவிக்கப்பட்ட இடத்தில் தான் உடல் அடக்கம் செய்ய முடியும். ஆம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது. ஆர்ம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு என் இரங்கலை தெரிவிக்கிறேன். நீதிமன்றத்தில் பல முறை அவரை பார்த்துள்ளேன், நீதிபதியாக அல்லாமல் சகோதரியாக சொல்கிறேன் வேறு நல்ல இடத்தை கூறுங்கள். பேசிவிட்டு வாருங்கள். நான் இங்கேயே இருக்கிறேன். மேலும் தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்துவிட்டு , வேறு இடத்தில் மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம். தற்போதைக்கு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என நீதிபதி பவானி சுப்புராயன் கூறினார். இது தொடர்பாக 12 மணிக்கு பதில் அளிப்பதாக பொற்கொடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!