Skip to content
Home » ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக காத்திருந்த காங் நிர்வாகி அஸ்வத்தாமன்.. பரபரப்பு தகவல்கள்..

ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக காத்திருந்த காங் நிர்வாகி அஸ்வத்தாமன்.. பரபரப்பு தகவல்கள்..

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கடந்த ஆண்டு மெரினா கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரன் பொன்னை பாலு, ஆற்காடு சுரேஷ் மைத்துனரான வக்கீல் அருள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் ரவுடி திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டர் செய்தனர். அதிமுக வழக்கறிஞரான பிரபல ரவுடி தோட்டம் சேகர் மனைவி மலர்கொடி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அரிஹரன் மற்றும் வடசென்னை மேற்கு மாவட்ட பாஜ துணை தலைவர் அஞ்சலை ஆகியோர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பணம் கொடுத்து உதவியது தெரியவந்தது. பாஜ மகளிர் அணி நிர்வாகி அஞ்சலை உள்ளிட்டோரை தனிப்படையினர் கைது செய்தனர். 6 வழக்கறிஞர்கள் உட்பட 21 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். பொன்னை பாலு, மைத்துனர் அருள், ராமு, வக்கீல் சிவா, அதிமுக கவுன்சிலர் அரிதரன் என 5 பேரை தனிப்படையினர் நீதிமன்ற அனுமதியுடன் மீண்டும் காவலில் எடுத்து எழும்பூரில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பொன்னை பாலு, மைத்துனர் அருள் ஆகியோர் அதிர்ச்சிகரமான பல தகவல்களை தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொழிலதிபர் ஒருவருக்கு பல நூறு கோடி மதிப்புள்ள நிலம் உள்ளது. இந்த நிலத்தை அபகரிக்க இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக உள்ள அஸ்வத்தாமன் ஈடுபட்டுள்ளார். பிரபல அரசியல் கட்சி பிரமுகரும் இதற்கு பல வகையில் உதவி செய்துள்ளார். இதற்காக போலி ஆவணம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இது தொழிலதிபருக்கு தெரியவந்தது. உடனே தொழிலதிபர், ரவுடியான பாஜ பிரமுகர் மின்ட் ரமேஷ் உதவியை நாடியுள்ளார். அவர் மூலம் மூலப்பத்திரத்துடன் அந்த தொழிலதிபர் ஆம்ஸ்ட்ராங்கை சந்தித்தார்.

இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் இந்த நில பிரச்னையில் தலையிட்டு, காங்கிரஸ் பிரமுகரான அஸ்வத்தாமனை நேரில் அழைத்து கண்டித்துள்ளார். இது அஸ்வத்தாமன் தந்தையான பிரபல வட சென்னை தாதாவும் தற்போது வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக உள்ளவருமான நாகேந்திரனுக்கு தெரியவந்தது. உடனே நாகேந்திரன், சிறையில் இருந்தபடியே ஆம்ஸ்ட்ராங்கை தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார். இதனால் நாகேந்திரனுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் நேரடியாக மோதல் ஏற்பட்டது. கடந்த 2023ம் பிப்ரவரி மாதம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் கட்டுமான பணிகள் செய்து வரும் ஜெயபிரகாஷ் என்பவரை அஸ்வத்தாமன் காரில் கடத்தி துப்பாக்கி முனையில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், பாதிக்கப்பட்ட ஜெயபிரகாஷ், ஆம்ஸ்ட்ராங் உதவி மூலம் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, அஸ்வத்தாமனை கடந்த ஆண்டு பெங்களூரில் இருந்து காரில் வந்த போது போலீசார் கைது ெசய்ததால், ஆம்ஸ்ட்ராங் மீது நாகேந்திரனுக்கு கோபம் இருந்தது. தொடர்ந்து தனது மகன் அஸ்வத்தாமன் விஷயத்தில் முட்டுக்கட்டை போட்டு வரும் ஆம்ஸ்ட்ராங்கை பழிவாங்க நாகேந்திரன் முடிவு செய்துள்ளார்.  அதேநேரம், ஆற்காடு சுரேஷ் தரப்பினர் மற்றும் பிரபல தாதா சம்பவ செந்தில் தரப்பினர் ஆம்ஸ்ட்ராங்கை பழிவாங்க கடந்த 6 மாதங்களாக பல வகையில் முயற்சி செய்து வருவது, நாகேந்திரனுக்கு தெரியவந்தது. உடனே நாகேந்திரன் சிறையில் இருந்தபடியே ஆற்காடு சுரேஷ் மைத்துனர் வக்கீல் அருளிடம், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய எனது மகன் அஸ்வத்தாமன் உதவி செய்வார் என்றும், எனவே எனது மகனை நேரில் சென்று சந்திக்கும்படியும் கூறியுள்ளார். அதன்படி வக்கீல் அருள் 2 முறை அஸ்வத்தாமனை நேரில் சென்று பார்த்து, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான நிதி உதவியை பெற்றுள்ளனர். ஏற்கனவே வக்கீல் அருள், பொன்னை பாலு உள்ளிட்டோர் அளித்த வாக்குமூலத்தின் படி தனிப்படையினர் அஸ்வத்தாமனை கடந்த 2 நாட்களாக ரகசியமாக கண்காணித்து வந்தனர். பின்னர் அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்கு மூலத்தின்படி, அவருக்கு கொலையில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஸ்வத்தானை போலீசார் அதிரடியாக நேற்று கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *