நேற்றைய தினம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் பழைய ரவுடியுமான திருமலை தான் கொலையாளிகளுக்கு லைன் எடுத்து கொடுத்தாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் வீடு உள்ள பகுதியில் இருக்கும் பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல ஒருவாரமாக நோட்டமிட்டு வந்த திருமலை, ஆம்ஸ்ட்ராங் வந்து செல்லும் நேரம் மற்றும் புதிய கட்டிடப்பணியை பார்க்க ஆம்ஸ்ட்ராங் உடன் வரும் நபர்கள் குறித்து நோட்டமிட்டுள்ளார். மாலை நேரத்தில் புதிய கட்டிட பகுதிகளை பார்க்க ஆம்ஸ்ட்ராங் வரும் நேரத்தில் குறைந்த அளவிலான நண்பர்களே வருவதை நோட்டமிட்டு எதிர் தரப்பினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இக்கொலைச் சம்பவம் ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிவாங்கவே நடத்தப்பட்டதாக கூறும் முக்கிய குற்றவாளியான புன்னை பாலுவிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். புன்னை பாலு போலீசில் அளித்த வாக்குமூலத்தில், எனது அண்ணன் ஆற்காடு சுரேஷை கொன்றதோடு ஜெயபால் மற்றும் ஆம்ஸ்ட்ராங் தரப்பினர் எனக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர் என்றும் இதனால் பயந்து கொண்டு தனது மனைவி பிரிந்து விட்டதாகவும் கூறியுள்ளார். நேற்றைய தினம் கொலை செய்யப்பட்ட தனது அண்ணன் ஆற்காடு சுரேஷின் பிறந்த நாள் என்பதால் காலையில் இருந்தே ஆம்ஸ்ட்ராங்கை பின்தொடர்ந்து சம்பவத்தை நடத்தி முடித்தாக கூறியுள்ளார். மேலும் ஆம்ஸ்ட்ராங் குத்துச்சண்டை தெரிந்தவர் என்பதால் அவரை எவ்வாறு கொலை செய்வது என திட்டமிட்டு வெட்டும்போது ஆம்ஸ்ட்ராங் தடுக்க முயன்றால் நாட்டு வெடிகுண்டை வீசி கொலை செய்யவும் தயாராக இருந்தாக கூறியுள்ள புன்னை பாலு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் கவனத்தை திசை திருப்பி பின்புறமாக முதலில் கழுத்தில் வெட்டியும் பின்னர் கணுக்காலில் வெட்டியும் ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்து கட்டியுள்ளதாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதற்கிடையே, நெல்லையை சேர்ந்த கூலிப்படையினர் கொலை பின்னணியில் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.