சென்னை பெரம்பூர் வேணுகோபால்சாமி தெருவில் வசித்து வந்தவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்து வந்தார். ஆம்ஸ்ட்ராங்கிற்கு பொற்கொடி என்ற மனைவியும், சாவித்திரி என்ற இரண்டரை வயது பெண் குழந்தையும் உள்ளனர். இவர், நேற்று இரவு 7.15 மணியளவில் தனது வீட்டின் வெளியே அண்ணன் வீரமணி (65), பாலாஜி (53) ஆகியோருடன் தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது தனியார் உணவு டெலிவரி கம்பெனியில் வேலை செய்யும் ஊழியர்கள் போல அதே சீருடையில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் திடீரென ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி வந்தது. வழக்கமாக உஷாராக இருக்கும் ஆம்ஸ்ட்ராங், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் என்று நினைத்து அசால்டாக நின்று பேசிக் கொண்டிருந்தார். ஆனால் வந்த கும்பல் திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டியது. பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. தடுக்க வந்த 2 பேருக்கும் வெட்டு விழுந்தது. இதில், தலையில் பலத்த காயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அருள்தாஸ் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாது என்று மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்தக் கொலை சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க், இணை கமிஷனர் அபிஷேக் தீக்சித், துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் ராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் கொலையாளிகள் குறித்த அடையாளங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து பிரபல டைரக்டர் பா. ரஞ்சித் கதறி அழுதபடி மருத்துவமனைக்கு ஓடி வந்தார். ரஞ்சித் தலையில் அடித்தபடி கதறி அழுதார்.. கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்க் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருந்தன. ரவுடிகள் பட்டியலிலும் உள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை மெரினா கடற்கரையில் ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில், டெய்லர் செந்தில், ஜான் கென்னடி, ஜெயசந்திரன், சைதை சந்துரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போது பாம்சரவணன் என்ற ரவுடியும் சம்பவ இடத்துக்கு வந்தது தெரியவந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார். பாம்சரவணனுடன், ஆம்ஸ்ட்ராங்கும், ஒரு காரில் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டத்தில் இருந்தாகவும் சில காட்சிகள் வெளியாகின. ஆனால் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில், ஆம்ஸ்ட்ராங்க் கைது செய்யப்படவில்லை. அதே சமயம் ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, வடசென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி அஞ்சலை மகன் பாலு, முருகேசேன் ஆகியோர் ஆம்ஸ்ட்ராங்க்கை கொலை செய்ய திட்டம் தீட்டியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் 3 பேருமே தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இந்தக் கொலையை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். வடசென்னையில் அதுவும் பெரம்பூரில் கொலை செய்து விட்டு வெளியாட்கள் தப்பியிருக்க முடியாது. உள்ளூரைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக வடசென்னையைப் பற்றி நன்றாக தெரிந்தவர்கள்தான் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தின் போது ஆம்ஸ்ட்ராங்கின் அண்ணன் வீரமணிக்கு தலை மற்றும் முகத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது அவருக்கு 27 தையல்கள் போடப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொருவரான பாலாஜிக்கு காலில் தையல் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உள்பட 8 பேர் அண்ணாநகர் போலீசில் சரண் அடைந்தனர்.