கடந்த 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவரது வீட்டு வாசலிலேயே படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட 11 பேரையும் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மாதவரம் ரெட்டேரி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை கைப்பற்ற அழைத்துச் செல்லும்போது ரவுடி திருவேங்கடம் போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றதால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞரும் அதிமுகவில் இருந்து தற்போது நீக்கப்பட்டவருமான பெண் தாதா மலர்க்கொடி, மற்றொரு வழக்கறிஞரும் தமாகா நிர்வாகியாக இருந்தவருமான ஹரிஹரன், திருநின்றவூரைச் சேர்ந்த அருளின் கூட்டாளியும் திமுக பிரமுகரின் மகனுமான சதீஷ், மேலும் வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த அஞ்சலையிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காகவே தான் பண உதவி செய்ததாக அஞ்சலை வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கொலையாளிகளுக்கு பணம் கொடுத்ததுடன் தங்குமிடமும் ஏற்பாடு செய்ததாக அஞ்சலை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஹரிதரன் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் வீசப்பட்ட 5 செல்ஃபோன்களை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையே, உளவுத்துறை, போலீசாருக்கு ஒரு எச்சரிக்கை மெசேஜை அனுப்பியுள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன. அதாவது, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க, தலைமறைவாக உள்ள அவரது ஆதரவாளரான பாம் சரவணன் திட்டமிடலாம் என உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பரும் பகுஜன் சமாஜ் கட்சி வடசென்னை மாவட்ட செயலாளருமான தென்னரசு கடந்த 2016 ஆம் ஆண்டு, ஆற்காடு சுரேஷ் கும்பலால் கொலை செய்யப்பட்டார். இறந்த தென்னரசுவின் சகோதரர்தான் பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் மீது மிகுந்த அன்பு கொண்டவர். A+ குற்றப் பின்னணி கொண்ட பட்டியலில் இருப்பவர். 5 கொலை வழக்குகள் சரவணன் மீது உள்ளன. வெடிகுண்டு வீச்சு, கட்டப் பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தொடர் குற்றங்களை கட்டுப்படுத்தும் விதமாக இதுவரை 5 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சரவணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீர்க்க, ஆற்காடு சுரேஷ் தரப்பினரை மொத்தமாக காலி செய்ய பாம் சரவணன் ரகசிய திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை சந்தேகிக்கிறது. இதன் காரணமாக போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.