கோவை நகரில், சித்தாபுதூர் பகுதியில் பல்வேறு கடைகளுக்கு பொருட்களை டெலிவரி செய்யும் ஆம்னி கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ஆம்னி கார், ஃப்ரீலான்சிங் முறையில் செயல்பட்டு வந்தது. பல்வேறு கடைகளுக்கு பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக இந்த வாகனம் பயன்படுத்தப்பட்டு வந்தது. சம்பவத்தன்று, நீண்ட தூர பயணத்தை முடித்துவிட்டு ஆம்னி காரை சித்தாபுதூர் பகுதியில் ஓட்டுநர் நிறுத்திச் சென்றுள்ளார். பின்னர், காரின் கிளீனர் வண்டியை மீண்டும் இயக்க முயன்றபோது, திடீரென காரில் இருந்து புகை வர ஆரம்பித்தது.
உடனடியாக காரை நிறுத்திவிட்டு, கிளீனர் புகை வந்த இடத்தில் தண்ணீரை ஊற்றினார். அப்போது, தீ மளமளவென பரவி எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த கிளீனர், உடனடியாக அருகில் இருந்த கடைகளில் இருந்து தீயணைப்பான்களைக் கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சித்தார். ஆனால் தீ குறையவே இல்லை, உடனடியாக கோவை மத்திய தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
