தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சி நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஒரு சில பகுதிகளில் சாலைகள் முழுமையாகவும் போடப்பட்டு தற்போது வாகனங்கள் சென்று வருகிறது.
இந்நிலையில் அம்மாப்பேட்டை அருகே அவில்தார்சத்திரம் என்ற பகுதியில் புதிய சாலை பழைய சாலையுடன் இணைக்கப்பட்டு மூன்று வழிப்பாதையாக உள்ளது. அங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரும்பு தடுப்பு வேலி பொறுத்தப்பட்டிருந்தது.
நாளடைவில் அங்கு இருந்த தடுப்பு வேலி சிதலமடைந்தது. எனவே அந்த இடத்தில் தடுப்பு வேலி இல்லாததால் வாகன ஓட்டுனர்கள் அடிக்கடி வாகன விபத்தில் சிக்கி வருகின்றனர். அதேபோல் அங்கு மின் விளக்குகளும் இல்லாததால் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த பகுதியில் இரும்பு தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அங்கு போடப்பட்டுள்ள சாலை முழுமையாக முடிக்கப்படவில்லை. எனவே அதனை பயன்படுத்தி குடிமகன்கள் அங்கு மது அருந்தி வருகிறார்கள். எனவே இரவு நேரங்களில் காவல் துறையினர் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.