திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் நகை கடந்த 5-ம் தேதி மாயமானதாக கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து திருவேற்காடு போலீசில் கோவில் அதிகாரி புகார் அளித்தார்.
விசாரணையில், அம்மன் கழுத்தில் இருந்த தாலி செயினை தற்காலிக அர்ச்சகர் சண்முகம் என்ற பாபு(40) திருடி அடகு வைத்தது தெரியவந்தது. புகாரை தொடர்ந்து அவர் அடகு வைத்த நகையை திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது
அந்த அர்ச்சகர் கடந்த ஓராண்டாக இங்கு தற்காலிகமாக பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. சில நாட்களாக பலரிடமும் கடன் கேட்டு வந்துள்ள நிலையில், அம்மன் கழுத்தில் இருந்த நகையை திருடியிருக்கிறார். தற்போது தலைமறைவாக உள்ள அவரை திருவேற்காடு போலீசார் தேடி வருகின்றனர்.