சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்திற்கு இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென சென்றார். அங்கு உணவு தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்பணி நடந்து கொண்டிருந்தது.
முதல்வர் திடீரென வந்ததால் அங்குள்ள பெண் பணியாளர்கள் பரபரப்படைந்தனர். அவர்களிடம் விசாரித்த முதல்வர் தயாரிக்கப்பட்டுள்ள தயிர் சாதம், பருப்பு சாதம், உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். உணவு தரமாகவும், சுகாதாரமான முறையிலும் வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
பின்னர் உணவு அருந்திக்கொண்டிருந்த ஒருவரிடமும் முதல்வர், உணவு ருசியாக, தரமாக இருக்கிறதா என்று கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது முதல்வருடன் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனும் சென்றிருந்தார்.
அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின், அம்மா உணவக பாத்திரங்கள், கருவிகள் ஆகியவற்றை புதுப்பிக்க ரூ.7 கோடியும், உணவகங்களை புனரமைக்க ரூ.14 கோடியும் , ஆக மொத்தம் ரூ.21 கோடி ஒதுக்கி உத்தரவிட்டார்.