தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று திடீரென டில்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். பின்னர் அவர் விமானம் மூலம் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவது குறித்து அமித்ஷாவிடம் பேசினேன். பாஜகவுக்கும், எனக்கும் தனிப்பட்ட தலைவர்கள், கட்சி மீது மோதல் இல்லை. பாஜக வேகமாக வளர வேண்டும் என நாங்கள் சில முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். கட்சியை வலுப்படுத்த நினைக்கும் போது ஒரு சில மனஸ்தாபங்கள் வருவது வழக்கம் தான். கட்சிக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு பாஜக வளர வேண்டும் என்பதே நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வழக்கமாக அண்ணாமலையின் பேட்டி பரபரப்புடன் இருக்கும். ஆளுங்கட்சி மீது சரமாரி புகார் கூறுவார். அதிமுகவையும் மறைமுகமாக சாடுவார். ஆனால் டில்லியில் இருந்து வந்ததும் அவர் அளித்த பேட்டி அந்த அளவுக்கு பரபரப்புடன் இல்லை. இது குறித்து பாஜகவை சேர்ந்த சிலர் கூறும்போது, அதிமுகவுடன் மோதல் போக்குடன் நடந்து கொள்ள வேண்டாம் என சொல்லவே அண்ணாமலை டில்லிக்கு அழைக்கப்பட்டார். தேர்தல் வரை அமைதியாக இருங்கள் என அவருக்கு அமித்ஷா டோஸ் விட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.