Skip to content
Home » அமிர்தகடேஸ்வரர் கோவில் எமன் சம்ஹாரம் நிகழ்ச்சி…

அமிர்தகடேஸ்வரர் கோவில் எமன் சம்ஹாரம் நிகழ்ச்சி…

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் அமைந்துள்ள அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் புகழ்பெற்றதாகும். புராண காலத்தில், பக்த மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது, மார்க்கண்டேயர், சிவலிங்கத்தை கட்டியணைத்தார். அப்போது, இறைவன் தோன்றி, எமனை சம்ஹாரம் செய்ததாக, ஆலய வரலாறு கூறுகின்றது. பின்னர் பூமா தேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, எமனை, சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தார். இதனால் இங்கு, ஆயுள் சம்பந்தமான, வழிபாடுகள், 60ம் ,80 கல்யாணம்ஆயூஷ் ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த ஆலயத்தின் வரலாற்றை விளக்கும் வகையில், ஆண்டுதோறும், சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் எமன் சம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும் இதனை முன்னிட்டு கடந்த 25 ஆம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான எமனை சிவபெருமான் சம்ஹாரம் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதனையொட்டி காலசம்ஹாரமூர்த்தி, பாலாம்பிகையுடன் வீரநடன மண்டபத்திற்கு எழுந்தருளி வீரநடனம் புரிந்தார். பின்னர், எமன் எருமைக்கடா வாகனத்தில் மார்க்கண்டேயரை துரத்தும் நிகழ்ச்சியும், தொடர்ந்து, எமனை இறைவன் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் தருமபுர ஆதீன 27 மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அமிர்தவிஜயகுமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *