Skip to content
Home » நிதிஷ்குமார் கருத்துக்கு….. அமெரிக்க பாடகியும் எதிர்ப்பு

நிதிஷ்குமார் கருத்துக்கு….. அமெரிக்க பாடகியும் எதிர்ப்பு

  • by Senthil

பீகார் சட்டசபையில் பெண் கல்வியின் பங்கு மற்றும் மக்கள்தொகை கட்டுப்பாட்டில் பெண்களின் பங்கு ஆகியவற்றை பற்றி முதல் மந்திரி நிதிஷ்குமார் நேற்று முன்தினம் பேசினார். அப்போது சர்ச்சைக்குரிய வகையில் சில விஷயங்களைக் குறிப்பிட்டது உறுப்பினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அவர், குழந்தைகள் பிறப்புக்கான கட்டுப்பாட்டில் பெண் கல்வியின் பங்கு பற்றி அவையில் பேசும்போது, கர்ப்பிணியாகாமல் தவிர்க்கும் வகையில் எப்படி பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என கல்வியறிவு பெற்ற ஒரு பெண், தன்னுடைய கணவரிடம் கூறி, உறுதி செய்து கொள்வார் என்றார்.

இதனை விவரித்து பேசும்போது, கைகளை அசைத்து, அதற்கான செய்கைகளை வெளிப்படுத்தியதுடன், மிகைப்படுத்தியும் பேசினார் என அவருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது. அவரது பேச்சுக்கு பா.ஜ.க. சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தேசிய மகளிர் ஆணையமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிதிஷ்குமார் உடனே மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தியது. இதையடுத்து, பீகார் சட்டசபை நேற்று கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். இதனால் எனது பேச்சுகளைத் திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என நிதிஷ்குமார் தெரிவித்தார். இந்நிலையில, நிதிஷ்குமார் விவகாரம் தொடர்பாக அமெரிக்க பாடகி மேரி மில்பென் எக்ஸ் சமூக வலைதளத்தில், பீகார் முதல் மந்திரிக்கான வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவேன் என தைரியமுள்ள பெண் ஒருவர் முன்வந்து அறிவிப்பார் என நான் நம்புகிறேன். நான் ஓர் இந்திய குடிமகளாக இருந்திருப்பேன் என்றால் பீகாருக்குச் சென்று முதல் மந்திரிக்கான தேர்தலில் போட்டியிடுவேன். பீகாரை வழிநடத்த பெண் ஒருவருக்கு பா.ஜ.க. அதிகாரமளிக்க வேண்டும். அதுவே பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் வளர்ச்சிக்கான உண்மையான உணர்வாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!