அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ளது கனோகா பூங்கா. இதன் அருகே உள்ளது வெஸ்ட்ஃபீல்ட் டோபங்கா வணிக வளாகம் (Westfield Topanga shopping mall). இந்த வணிக வளாகத்தில் உள்ள நார்ட்ஸ்ட்ராம் பல்பொருள் அங்காடியில் , 2 நாட்களுக்கு முன் மாலை 4 மணியளவில் திடீரென சுமார் 50 பேர் கொண்ட ஒரு கும்பல் உள்ளே நுழைந்தது. அந்த கும்பல் தங்கள் அடையாளங்களை மறைக்க பலவிதமான முகமூடிகளை அணிந்து வந்தது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வாசலில் இருந்த காவலர்கள் முகங்கள் மீது கரடியை விரட்ட பயன்படுத்தும் ஸ்பிரேயை அடித்தனர்.
இதனால் அந்த காவலர்கள் செயலிழந்து நின்றனர். அதன் பிறகு அந்த கும்பல் அங்கு ஒரு வன்முறை வெறியாட்டத்தையே நிகழ்த்தியது. அந்த வன்முறை கும்பல் கடையில் உள்ள கைக்கு கிடைத்த விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் பைகளில் போட்டு கொண்டன. கண்ணாடி அலமாரியில் வைக்கப்பட்டிருந்த பல விலையுயர்ந்த பொருட்களையும், துணிக்கடை பொம்மைகளையும் நாசம் செய்தது. இவர்களின் வெறியாட்டத்தை கண்ட கடை ஊழியர்கள் செய்வதறியாது பயந்து நின்றனர்.
அந்த கொள்ளையர்கள் அங்குள்ள விலையுயர்ந்த பொருட்களையும், ஆடைகளையும் கொள்ளையடித்த பிறகு காவல்துறை வருவதற்குள் வேகவேகமாக வெளியேறி, பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் லெக்ஸஸ் (Lexus) கார்களில் தப்பித்து சென்றனர். “காட்டுமிராண்டித்தனமான ஒரு வன்முறையிலும், கொள்ளையிலும் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக அங்கிருந்தவர்களோடு நேரில் பேசி வருகிறோம். இது வெறும் கொள்ளை சம்பவம் மட்டுமல்ல. இப்பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விஷயம். இக்குற்றத்தில் சம்பந்தபட்டவர்களை விரைவில் பிடிக்கப்படுவார்கள். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தரப்படும்” என இச்சம்பவம் குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை ஆணையர் ஜிஸெல் எஸ்பினோஸா கூறியிருக்கிறார். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.2.5 கோடிக்கு மேல் இருக்கலாம் என தெரிகிறது.