Skip to content
Home » அரியலூரில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய அமெரிக்க குடும்பத்தினர்..

அரியலூரில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய அமெரிக்க குடும்பத்தினர்..

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் செயல்பட்டு வரும் ரீடு தொண்டு நிறுவனம் சார்பில் மனவளர்ச்சி குழந்தைகளுடன் ஆண்டுதோறும் சமத்துவ பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நடைபெற்ற இவ்விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் கோயன் வான் ராம்பே, வெர்லி, ராபின் உள்ளிட்டோர் தனது குடும்பத்துடன் வந்திருந்தனர். பின்னர் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, பொங்கலோ பொங்கல் என கோஷங்கள் எழுப்பி கொண்டாடினர். அப்போது அங்கிருந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து, கும்மி

அடித்தனர். செங்கரும்புடன் கூடிய பொங்கல் பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து வழிபாடு செய்வதை நேரில் பார்வையிட்டு, அதன் விளக்கத்தை ரீடு தொண்டு நிறுவன நிறுவனர் ரீடு செல்வத்திடம் கேட்டறிந்தனர். மேலும் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலைகளை விரும்பி அணிந்து கொண்டாடியதாகவும், தங்களுக்கு இது மிகவும் பிடித்து இருந்ததாகவும், சமத்துவ பொங்கல் விழாவில் நாங்கள் பங்கேற்றது எங்களால் மறக்கமுடியாத நிகழ்வாக அமையும் என அவர்கள் தெரிவித்தனர்.