அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே சீனாவின் ராட்சத உளவு பலூன் பறப்பதாக நேற்று முன்தினம் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.இதுப்பற்றி அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் மூத்த அதிகாரி கூறுகையில், “மொன்டானாவில் உள்ள அணு ஆயுத தளத்தில் சீனாவின் உளவு பலூன் ஒன்று பறந்து வருவதைக் கண்டோம். நிச்சயம் அது ரகசியமான தகவல்களை சேகரிப்பதற்காக வந்ததாக நாங்கள் நம்புகிறோம். மக்களின் பாதுகாப்புக்காக அந்த பலுனை நாங்கள் சுடவில்லை.
பலுனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்றார். இந்த விவகாரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனிடையே மொன்டானாவில் காணப்பட்ட உளவு பலூன் போல் லத்தீன் அமெரிக்காவிலும் ஒரு உளவு பலூனை பார்த்ததாக பென்டகன் நேற்று தெரிவித்தது. எனினும் லத்தீன் அமெரிக்காவின் எந்தப் பகுதிக்கு மேல் அந்த உளவு பலூன் உள்ளது என்பதை பென்டகன் தெளிவாக குறிப்பிடவில்லை.இதனிடையே அட்லாண்டிக் பெருங்கடலில் சீனாவின் உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பலூனை சுட்டு வீழ்த்துவதற்கு ஒப்புதல் அளித்தார் என்றும் இராணுவ அதிகாரிகளின் ஆதரவுடன் உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.