திருச்சியில் மிளகுபாறையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று நிருபர்களை சந்தித்து பேசினார்…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பெருமன்றம் சார்பில் கடந்த 23ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை எங்களுக்கு வேலை வேண்டும் என்று முழக்கத்தோடு பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனையொட்டி தமிழகத்தில் நடைபெற்று வரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் இறுதி நிகழ்வாக வருகின்ற 2ஆம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது.
அந்த மாநாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை என்பது அதிகமாக உள்ளதாகவும் ஒன்றிய அரசு ஆனது வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தது. இன்று வரை அந்த வாக்குறுதியை ஒன்றிய அரசு நிறைவேற்றாமல் உள்ளது. எனவே ஒன்றிய மாநில அரசாங்கங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் உரிய வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்த மாநாடு நடைபெற உள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் தனியார் பொதுத்துறை அரசு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றுபவர்களை வெளியேற்றும் நிலை ஏற்பட்டு வருகிறது. தற்போது பெரும்பாலும் வேலை வாய்ப்பிற்கு அமர்த்தப்படக்கூடியவர்கள் அனைவரும் நிரந்தர பணியாளர்களாக இல்லாமல் ஒப்பந்த பணியாளர்களாகவே நியமிக்கப்படுகிறார்கள்.
ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்கப்படுபவர்கள் குறைந்த ஊதியத்தோடு பணியாற்றும் நிலை ஏற்படுகிறது மாதத்திற்கு 21 ஆயிரம் ரூபாய் அடிப்படை வருமானம் இருக்க வேண்டும் என்று சட்டங்கள் இருந்தாலும் நடைமுறையில் மாதம் 5 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே ஒப்பந்த தொழிலாளர்கள் பெரும் நிலை உள்ளது. இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பு இல்லாமல் பல லட்சம் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே ஒப்பந்த தொழிலாளர்களாக இருக்கக்கூடிய அனைவரும் நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன் வைக்கிறது.
பண்டிட் ஜவர்கலால் நேரு பிரதமராக இருந்த காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் தான் இந்தியாவின் ஆலயங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அவருடைய காலகட்டத்தில் சுமார் 33 பொதுதுறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது. லால் பகதூர் பிரதமராக இருந்தபோது அவருடைய ஆட்சிக்காலத்தில் 5 பொதுத்துறை நிறுவனங்களும், இந்திராகாந்தி காலத்தில் 66 பொதுத்துறை நிறுவனங்களும், விபி சிங் ஆட்சி காலத்தில் இரண்டு பொதுத்துறை நிறுவனங்களும், நரசிம்மராவ் காலத்தில் 14 பொதுத்துறை நிறுவனங்களும், ஐ கே குஜரால் ஆட்சி காலத்தில் 3 பொதுத்துறை நிறுவனங்களும், வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 17 பொதுத்துறை நிறுவனங்களும், மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 23 பொதுத்துறை நிறுவனங்களும் உருவாக்கப்பட்டது.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து
இன்று வரை ஒரு புதிய பொதுத்துறை நிறுவனத்தையும் உருவாக்கவில்லை. அதற்கு பதிலாக 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்துள்ளார்.
அதேபோல் அதானியின் கடன்களை ஒன்றிய அரசு எப்படி தள்ளுபடி செய்கிறதோ அதேபோல் கல்விக்காக கடன் பெற்ற மாணவர்களின் கடன்களை ஒன்றிய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் அல்லது அரசாங்க வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
இன்றைய நிலையில் பாஜக அரசானது ஒரே நாடு ஒரே கட்சி என்ற சர்வாதிகார போக்கை கையாளும் பணியில் ஈடுபட்டு வருகிறது. எனவே எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க திட்டமிட்டு தற்போது ராகுல் காந்தியின் மீதான அடக்கு முறையை முன்னெடுத்துள்ளது. அதில் உச்சபட்சமாக அரசாங்கக் குடியிருப்பில் இருந்து அவரை காலி செய்ய வைத்ததும் அவருடைய பதவியிலிருந்து அவரை வெளியேற்றியதும் அடக்கு முறையின் உச்சமாக உள்ளது எனவே பாஜக அரசானது மடை மாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
பாஜக ஒரு புல்லுருவி என்பதை இந்த நாடு அறிந்திருக்கிறது. அதை விரைவில் அகற்றுவதே எங்களின் நோக்கம். அதிமுகவை அடிப்படையாகக் கொண்டு பாஜக தமிழகத்திற்குள் நுழைய முயற்சி செய்து வருகிறது அதற்கு இடம் கொடுத்ததும் அதிமுக தான் எனவே பாஜக சொல்வதை அதிமுக செய்வதால் அவர்கள் கூட்டணி தொடர்ந்து நீடித்து வருகிறது ஆனால் எங்களுடைய கூட்டணி ஒருபோதும் முடியாது நாங்கள் கொள்கை ரீதியாக இப்போது எந்த இடத்தில் இருக்கிறோமோ அதே இடத்தில் தொடர்ந்து நீடிப்போம் என்றும் கூறினார்.