நாகை மாவட்டம், வேதாரண்யம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவர் கடந்த 18-ம் தேதி பிரபல ஆன்லைன் வணிக நிறுவனத்தில் ஆன்லைனில் வீட்டுக்கு தேவையான மின்சார வயரை ஆர்டர் செய்துள்ளார். மேலும் அதற்கான தொகை ரூ 990 ஐ கடந்த 21ம் தேதி ஆன்லைனில் செலுத்தி உள்ளார்.
இந்த நிலையில், நேற்று மாலையில் அமேசான் ஆன்லைன் வணிக நிறுவனத்திலிருந்து பார்சல் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. பார்சலை கொடுத்துவிட்டு டெலிவரி பாய் சென்றுவிட்ட நிலையில், அதனை வாங்கி வீட்டில் வைத்துவிட்டு மற்ற பணிகளில் பிசியாக இருந்துள்ளார் வேலாயுதம். இதனைத் தொடர்ந்து, இரவான பிறகு பார்சலை திறந்து பார்த்தவர் அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம், மின் வயருக்கு பதிலாக பார்சலில் காலி மதுபாட்டில் இருந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து பேசிய அவர், “இதுவரை தான் எத்தனையோ முறை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளேன். ஆனால் எப்போதும் இதுபோன்று ஆனதில்லை. தற்போது மக்களிடையே ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் மோகம் அதிகரித்து வரும் சூழலில் இப்படி ஏமாற்றுவதா?. எனக்கு வந்த பார்சலை திறந்து பார்த்து அதிர்ந்து மயங்கிவிட்டேன். நான் ஏற்கனவே ஒரு இதயநோயாளி. இப்படியா ஏமாற்றுவது? இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆன்லைன் வணிக நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார். ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.