டெல்லி மாநகராட்சியில் காங்கிரஸ் சார்பில் முஸ்தபாபாத் வார்டு எண் 243ல் வெற்றி பெற்ற சபிலா பேகமும், பிரிஜ் பூரி வார்டு எண் 245ல் நாஜியா கட்டூனும் இன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர். இவர்களுடன் டெல்லி காங்கிரஸ் துணைத் தலைவர் அலி மெஹ்தியும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். சமீபத்தில் நடந்த டெல்லி எம்சிடி தேர்தலில் காங்கிரஸ் 9 இடங்களில் வெற்றி பெற்றது. அதிலிருந்து தற்போது 2 பேர் அதற்குள் ஆம் ஆத்மிக்கு தாவியது பரபரப்பை உருவாக்கியுள்ளது. கட்சித் தாவல் தடைச் சட்டம் உள்ளாட்சி தேர்தல்களுக்குப் பொருந்தாது. தனது பகுதியில் வளர்ச்சியை விரும்புவதால் ஆம் ஆத்மியில் சேர முடிவு செய்ததாக அலி மெஹ்தி கூறினார். அவர், “கேஜ்ரிவால் செய்த வளர்ச்சிப் பணிகளைப் பார்த்து ஆம் ஆத்மி கட்சியில் சேர முடிவு செய்துள்ளோம். எங்கள் பகுதியில் வளர்ச்சி வேண்டும். கேஜ்ரிவாலின் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி தலைநகரை மேம்படுத்த கடுமையாக உழைத்து வருகிறது” என்று கூறினார். டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜகவிடம் இருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 134 இடங்களையும், பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் 9 இடங்களையும் கைப்பற்றியது.