மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.
இதனால் அணை நிரம்பியது. தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர் கடந்த 2 நாட்களாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
அந்த தண்ணீரானது நேற்று மாலை கரூர் மாவட்ட எல்லையை வந்தடைந்தது. இதையடுத்து தற்போது அந்த தண்ணீர் கரூர் மாநகரை ஒட்டிய செட்டிப்பாளையம் தடுப்பணையை வந்தடைந்தது.
இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 2316 கன அடி தண்ணீர் கரூர் நகரை நோக்கி வந்து கொண்டுள்ளது. இன்று காலை கரூர் மாநகரை கடந்து செல்கிறது.
அமராவதி கரையோர பகுதியில் விவசாயிகள் கிழங்கு, நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர். இந்த பயிர்களுக்கு அமராவதி தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கடந்த வாரம் அமராவதி ஆறு வறண்டு காணப்பட்ட நிலையில் தற்பொழுது ஆற்றில் நீர் வந்து கொண்டிருப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.