Skip to content

அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்

  • by Authour

, சென்னை பனையூரில் பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றும்போது மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில் அமர் பிரசாத் ரெட்டி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அமர் பிரசாத் ரெட்டி சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 10-ந்தேதிக்கு(இன்று) ஐகோர்ட்டு ஒத்திவைத்தது. அதன்படி இன்றைய தினம் இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில், இந்த விவகாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்டுள்ளதால் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதாகவும், அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, கைது செய்யப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி உள்பட 6 பேரும் கானத்தூர் காவல் நிலையத்தில் காலை, மாலை என இரண்டு வேளையும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் சேதப்படுத்தப்பட்ட ஜே.சி.பி. இயந்திரத்தின் உரிமையாளருக்கு 6 பேரும் தலா ரூ.2,000 என மொத்தம் ரூ.12,000 இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *