தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசு போது கூறியதாவது:- மிக மோசமான நிதி நெருக்கடியிலும் மகத்தான திட்டங்களை தமிழ்நாடு அரசு செய்து கொடுத்துள்ளது.1 கோடி மகளிர் மாதந்தோறும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை பெற உள்ளார்கள். இனி தமிழ்நாட்டில் திமுக தான் ஆள வேண்டும் என மக்கள் மனநிறைவுடன் முடிவெடுத்துள்ளனர்.மக்களுக்கு நேரடியாக, தினமும் பலன் தரும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. மக்கள் மனங்களை யாராலும் மாற்ற முடியவில்லை, ஏமாற்றவும் முடியவில்லை. தேர்தலில் மட்டும் வெல்லவில்லை, மக்கள் மனங்களையும் வென்றிருக்கிறோம்.
இது தனிப்பட்ட ஸ்டாலின் அரசு அல்ல, திமுக என்ற தனிப்பட்ட கட்சியின் அரசு அல்ல. ஒரு இனத்தின் அரசாக, 8 கோடி மக்களின் அரசாக உள்ளது. திராவிட மாடல் அரசாக திகழ்கிறது.
மக்கள் நலன், கொள்கை இவை இரண்டையும் முன்னெடுக்கும் ஆட்சியாக 2 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறோம். கோவையில் கடந்த ஆண்டு உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய எதிரிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர்; 3 நாளில் இது போன்ற வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியது தமிழ்நாடு அரசு தான். கோவை பாதுகாப்பை கருதி பல்வேறு பகுதிகளில் புதிய காவல்நிலையங்கள் அமைக்கவும், கூடுதல் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தவும் முடிவெடுக்கப்பட்டன;
மத ரீதியிலான மோதல் இன்றி தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்ந்து வருகிறது. சாதிச் சண்டை பூசல் இன்றி தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது; காவல்நிலைய மரணங்களை தடுப்பதில் திமுக அரசு சாதனை படைத்துள்ளது; கடந்த ஆட்சியை ஒப்பிடும்போது காவல்நிலைய மரணங்கள் குறைந்துவிட்டது” கோட்டையில் அமர்ந்து திட்டங்களை தீட்டினால் போதாது.மக்களுக்கு நெருக்கமாகச் சென்று திட்டங்களை கண்காணிக்க வேண்டும் என்பதற்காக “களஆய்வில் முதல்- அமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கினோம்.
ஆரூத்ரா போன்ற நிதி நிறுவனம் குறித்து மக்களிடம் ஆசையை தூண்டி இது போன்ற நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன. இத்தகையை நிதிநிறுவனங்களை கண்காணிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்; பொதுமக்கள் எச்சரிக்கையுடன் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். கோடநாடு விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவரின் பேச்சுகளில் முரண்பாடு, ஏன் இந்த தடுமாற்றம். கோடநாடு கொலை, கொள்ளையை அப்போதய முதலமைச்சரே மறைக்க முற்படும்போது திமுக எப்படி அமைதியாக இருக்க முடியும்.? சிபிசிஐடி விசாரணையில் முழு உண்மையும் வெளிவரும் . வருகிற மே மாதம் 7ம் தேதி 2 ஆண்டுகளை பூர்த்தி செய்து 3வது ஆண்டில் திமுக ஆட்சி அடியெடுத்து வைக்கிறார். இனி எப்போதும் திமுக ஆட்சி தான் என்று மக்கள் சொல்லும் அளவுக்கு ஆட்சியை சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறோம். திமுக ஆட்சி பற்றி யார் எதைக்கூறினாலும் மக்கள் மனரதை மாற்ற முடியவில்லை. திமுக அரசு இந்தியாவையே ஈர்க்கும் அரசாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
முதலமைச்சர் பதிலுரையுடன்சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்தது.