அரியலூர் மாவட்டத்தினா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி திட்ட இலக்கை அடையும் வகையில், அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயலட்சுமி வலியுறுத்தினார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், முக்கிய துறைகள் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான விஜயலட்சுமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, சுகாதார பணிகள் துறை, பொது விநியோகத் துறை, நீர் மேலாண்மை, குடிநீர் வழங்கல் துறை, வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும்
திட்டங்கள், அவற்றின் தற்போதைய நிலை, பயனாகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது மத்திய, மாநில அரசுகள் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. இத்திட்டங்களின் முழு பயனையும் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி திட்டங்களின் பயன் கடைக்கோடியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு திட்டங்களின் இலக்குகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என, அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உள்ளிட்ட அனைத்து துறை அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.