நாகை மாவட்ட திமுக பொறுப்பாளர் கவுதமன் இல்லத்திருமண விழா இன்று நாகையில் நடந்தது. மகிபாலன் உமா மகேஸ்வரி திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
வரும் 5ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. நாம் எதிர்நோக்கி இருக்கும் பிரச்னை உங்களுக்கு தெரியும். மும்மொழி கொள்கையை மத்திய அரசு கொண்டு வருகிறது. தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு தமிழ்நாட்டில் தொகுதிகளை குறைக்க முயற்சி செய்கிறது. தமிழ்நாட்டின் உரிமையை பறிக்க முயற்சி செய்கிறது.
இதற்காகத்தான் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். பெரும்பாலானவர்கள் வருவதாக கூறி உள்ளனர். ஒரு சில கட்சிகள் வர முடியாது என்ற கூறி உள்ளனர். அவர்கள் சிந்தித்து பார்த்து கூட்டத்துக்கு வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தயவு கூர்ந்து வர வேண்டும். இவர் என்ன அழைப்பது, நாம் என்ன செல்வது ?என நினைக்காமல், இது தமிழ்நாட்டு பிரச்னை , இதை அரசியலாக பார்க்காமல் தமிழ்நாட்டின் நலனை கருதி அனைவரும் கூட்டத்துக்கு வாருங்கள்.
முன்பெல்லாம் திருமண விழாவில் வாழ்த்தும்போது, உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்போம். இப்போது மக்கள் தொகை அடிப்படையில் தான் தொகுதிகள் வழங்கப்படுகிறது. எனவே உடனடியாக குழந்தையை பெற்றுக்கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அமைச்சர்கள், கூட்டணி கட்சித்தலைவர்கள் திரளாக பங்கேற்றனர்.
பின்னர் புதிய வழித்தடங்களில் பஸ் வசதியை முதல்வர் தொடங்கி வைத்தார்.