Skip to content
Home » முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

பொங்கல் தமிழரின் தனிப்பெரும் திருநாள்! நம் பண்பாட்டுப் படைக்கலன்! உழைப்பையும் உழவையும் இயற்கையையும் போற்றும் மதச்சார்பற்ற சமத்துவப் பெருநாள். நம் மீதுமுழுமையான நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நாம் என்றும் உண்மையாக இருந்து உழைத்திடுவோம். தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டு ஆயுதமாகத் தமிழர் திருநாள் எனும்  பொங்கல் திருநாளை  கொண்டாடுவோம்.

இன்பம் பொங்கும் தமிழ்நாடு’ என்று ஒவ்வொரு இல்லத்தின் வாசலிலும் வண்ணக் கோலமிட்டு, தை மகளை வரவேற்போம். தமிழ்த் தாயைப் போற்றிடுவோம்! மகிழ்ச்சிப் பெருவிழாவாக பொங்கலை கொண்டாடுவோம்.

கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் ஆண்டு 2056 நல்வாழ்த்துகள்!

இவ்வாறு முதல்வர் கூறி உள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

உலகத் தமிழர்கள் எல்லோரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், எனதருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், மக்கள் அனைவரும் குன்றா நலமும், குறையா வளமும், மங்கா புகழும், மாசிலா செல்வமும் பெற்று நிறை வாழ்வு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை உரித்தாக்குகிறேன்.

இதுபோல  காங். தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வைகோ, அண்ணாமலை, முத்தரசன்  உள்பட அனைத்து கட்சித்தலைவர்களும்  பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

h