தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு ஆகியோர் போட்டியில் உள்ளனர். இதுதவிர தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆது தவிர மேலும் 73 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சியினரை அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, முத்துசாமி, கே. என். நேரு ஆகியோர் முழுமையாக ஒருங்கிணைத்து வாக்குகள் சேகரித்து வருகிறார்கள். அ.தி.மு.க தரப்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக முக்கியமான தேர்தல். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி இல்லாமல் அ.தி.மு.க.வை தாங்கிப்பிடிக்க தன்னால் முடியும் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவருக்கு இந்த வெற்றி மிக மிக முக்கியமானதாக உள்ளது.
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வீதி வீதியாக சென்று தென்னரசுவுக்கு ஆதரவு திரட்டினார். இன்றும் (திங்கட்கிழமை) அவர் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஓட்டுகள் கேட்கிறார். தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தனது பிரசாரத்தை முடித்து சென்று இருக்கிறார். இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 24 மற்றும் 25-ந் தேதிகளில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்குகள் சேகரிக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்பட அனைவரும் ஈரோட்டுக்கு வந்து வார்டு வாரியாக சென்று வாக்குகள் சேகரித்து வருகிறார்கள். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தொடக்கத்தில் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்குகள் சேகரித்தார்.
நேற்று ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டு இருக்கிறார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதின் செயல்வீரர்கள் கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்குகள் சேகரித்தார்.
அடுத்தகட்ட தலைவர்கள் ஈரோட்டில் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வார்டு வாரியாக சென்று மக்களிடம் வாக்குகள் சேகரித்தார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையில் கட்சியின் அனைத்து கட்டநிர்வாகிகளும் கை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பணியாற்றி வருகிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு சென்று உள்ளார்.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து கூட்டணியில் புதிதாக இணைந்து உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் காங்கிரசின் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு தீவிர பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையிலும் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று மாலை வந்தார். அவர் ஈரோடு கருங்கல்பாளையம், சூரம்பட்டி நால்ரோடு, சம்பத் நகர், வீரப்பன்சத்திரம், பி.பி.அக்ரகாரம் பகுதிகளில் கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். இப்படி ஒட்டுமொத்த கட்சிகளின் தலைவர்களும் ஈரோட்டை நோக்கி படை எடுத்தவண்ணம் இருக்கிறார்கள். தலைவர்களின் சூறாவளி சுற்றுப்பயணம், அனல் பறக்கும் பிரசாரங்களால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. வாக்குப்பதிவு 27-ந் தேதி நடக்கிறது. எனவே பிரசாரம் 25-ந் தேதி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. வரும் நாட்களில் இன்னும் பிரசாரத்தின் வேகம் அதிகரிக்கும். தேர்தல் திருவிழா இன்னும் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.