Skip to content
Home » அரசு பஸ் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்து.. 5 எம்பிபிஎஸ் மாணவர்கள் உயிரிழப்பு

அரசு பஸ் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்து.. 5 எம்பிபிஎஸ் மாணவர்கள் உயிரிழப்பு

கேரளாவின் ஆலப்புழாவில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள் அருகில் உள்ள விடுதியில் தங்கி உள்ளனர். அவர்களில், முதலாம் ஆண்டு படிக்கும் 11 மாணவர்கள் இரவு ஒரே காரில் திரைப்படம் பார்க்க சென்றனர். விடுதியில் இருந்து ஆலப்புழா டவுனில் உள்ள திரையரங்குக்கு அவர்கள் சென்றபோது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. செங்கன்சேரி முக்கு பகுதியில் சென்றபோது எதிரே வந்த அரசு பேருந்து மீது கார் அதிவேகமாக மோதியது. இதில் கார் முழுவதுமாக நொறுங்கியது. விபத்து குறித்து அறிந்தததும் அருகில் வசித்த மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். வெல்டிங் இயந்திரத்தின் உதவியுடன் கார் அறுக்கப்பட்டு மாணவர்கள் மீட்கப்பட்டனர். இந்தக் கோர விபத்தில் காரில் பயணம் செய்த 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மாணவர்கள் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு 2 மாணவர்கள் உயிரிழந்தனர். கோட்டக்கல்லை சேர்ந்த தேவநாதன் (19), பாலக்காட்டை சேர்ந்த ஸ்ரீதேவ் வல்சன் (19), கோட்டயத்தை சேர்ந்த ஆயுஷ் ஷாஜி (19), லட்சத்தீவை சேர்ந்த முகமது இப்ராகிம் (19), கண்ணூரை சேர்ந்த முகமது அப்துல் ஜபார் (19) ஆகியோர் விபத்தில் உயிரிழந்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சைனி டென்ஸ்டன், ஆல்வின் ஜார்ஜ், கிருஷ்ணதேவ், கவுரி சங்கர், முகமது, ஆனந்த் மனு ஆகிய 6 எம்பிபிஎஸ் மாணவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அரசு பேருந்தில் பயணம் செய்த 15 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்கு பின்பு அவர்கள் வீடு திரும்பினர்.  இந்த சம்பவம் தொடர்பாக ஆலப்புழா போலீசார் கூறுகையில்.. “திங்கள்கிழமை இரவு ஆலப்புழாவில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது ஒரே காரில் 11 மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். அந்த கார் 14 ஆண்டுகள் பழமையானது. மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவரே, காரை ஓட்டி உள்ளார். கார் மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது விபத்து நடந்துள்ளது. அளவுக்கு அதிகமான பயணிகள், பலத்த மழை, இரவில் போதிய வெளிச்சம் இல்லாதது, அதிவேகம் போன்றவை விபத்துக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.பழைய கார் என்பதால் ஏர்பேக் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. இதுவும் உயிரிழப்புக்கு மிக முக்கிய காரணமாகும் என்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!