மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகேயுள்ள கீழக்கரை கிராமத்தில், 66 ஏக்கர் பரப்பளவில், ரூ.44 கோடி மதிப்பில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜன.24) காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். தொடர்ந்து அரங்கத்தில் முதன்முதலாக நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு நிகழ்வுகளையும் பார்வையிடுகிறார். பாரம்பரியம் பழம் பெருமை உள்ளிட்ட பல்வேறு நிலைகளிலும் இந்த மைதானம் பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வாடிவாசல், அதன் இருபுறமும் பார்வையாளர் மாடம் அதற்கு மேற்புறம் உள்ள நிரந்தர பார்வையாளர் மாடம் தற்காலிக பார்வையாளர் கேலரி என சுமார் 20 ஆயிரம் பேர் அமர்ந்து ஒரே நேரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நேரடியாக பார்க்கக் கூடிய வகையில் அரங்க அமைப்பு செய்யப்பட்டுள்ளது. வாடிவாசல் முன்பு தென்னை நார் கழிவுகள் தரைப்பகுதியில் கொட்டி தயார்படுத்தப்பட்டுள்ளது. எந்த பகுதியில் இருந்து பார்த்தாலும் ஜல்லிக்கட்டு காளைகள் வெளியேறும் இடம், ஜல்லிக்கட்டு காளைகள் சேகரிக்கும் இடம் வரை தெளிவாக தெரியும் வகையில் பார்வையாளர்களுக்கான இருக்கை மற்றும் மேடையை வடிவமைத்துள்ளனர். அதேபோல் முக்கிய பிரமுகர்கள் அமர்ந்து போட்டிகளை பார்க்கும் வகையில் தனியாக குளிர்சாதன அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. காயம்பட்ட வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன்பு வீரர்களுக்கான பரிசோதனை செய்வதற்கு அரங்க வளாகத்திற்குள்ளேயே ஆரம்ப சுகாதார மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஆன்லைன் முறையில் நடந்து முடிந்துள்ளது. இதில் பங்கேற்பதற்காக 9,312 காளைகளும், 3,669 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர். மதுரையில் நாளை திறக்கப்படும் புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்களை தேர்வு செய்துள்ளனர். அதோடு சிறந்த வீரருக்கு ரூ.1லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.