சிறுமியின் மார்பகத்தை பிடிப்பது, பைஜாமா நாடாவை அவிழ்ப்பது பாலியல் வன்கொடுமை அல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் கூறி இருந்தது. இந்த தீர்ப்புக்கு மத்திய பெண் அமைச்சரே தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். பெண்கள் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இன்று விசாரணை நடத்தியது. அதைத்தொடர்ந்து அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
“இந்த கருத்துகள் நீதிபதியின் திறன் குறைபாட்டை காட்டுகிறது. ஒரு நீதிபதிக்கு எதிராக, இப்படி சொல்வதற்கே வேதனையாக இருக்கிறது” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், ஏ.ஜி. மாஷிஹ் கருத்து தெரிவித்துள்ளனர்.
இத்தைகைய தீர்ப்பை எழுதிய நீதிபதியின் திறன்குறைபாட்டை இந்த தீர்ப்பு வெளிச்சம் போட்டு காட்டுகிறது எனவும் நீதிபதி இதுபோன்ற தீர்ப்பு வழங்குவது மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தீர்ப்பு சட்ட கோட்பாடுகளுக்கு எதிராகவும், மனிதாபமற்ற அணுகுமுறையை சித்தரிப்பதாகவும் தெரிய்வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அலகாபாத் நீதிமன்ற அந்த தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதிப்பதுடன் தீர்ப்பு குறித்து விரிவான பதிலளிக்க வேண்டும் என்ற உத்தரவையும் மத்திய அரசுக்கும், உத்திரபிரதேச மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. சிறுமிக்கு நிகழும் வன்கொடுமையை தடுப்பதுதான் சட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர அதனை விட கூடுதல் வேதனையை ஏற்படுத்த கூடாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அலகாபாத் நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.