தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஜோதிகா. சூர்யாவை திருமணம் செய்த பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டிருந்தார். அதன்பிறகு சில ஆண்டுகள் கழித்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இந்த திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் இந்தியில் தயாராகும் இந்தி வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து முடித்தார். இந்நிலையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலிவுட் படம் ஒன்றில் நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படமாக உருவாகிறது.
‘குயின்’, ‘சூப்பர் 30’, ‘குட் பை’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய விகாஸ் பால் இந்த படத்தை இயக்கவுள்ளார். அடுத்த மாதம் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கவுள்ளது. அதன்பிறகு லண்டனில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டேடியோஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.
இதற்கிடையே கடைசியாக கடந்த 1998-ஆம் ஆண்டு வெளியான ‘டோலி சாஜா கே ரக்னா’ என்ற இந்தி படத்தில் அஜய் தேவ்கனுடன் ஜோதிகா நடித்திருந்தார். தற்போது மீண்டும் அஜய் தேவ்கனும், ஜோதிகாவும் இணைந்து நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் பாலிவுட்டில் நடிப்பதற்காக தான் சென்னையிலிருந்து மும்பைக்கு நடிகை ஜோதிகா குடிபெயர்ந்தார். சமீபத்தில் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.