விடுதலை, கருடன், கொட்டுக்காளி என அடுத்தடுத்து கதையின் நாயகனாக நடித்திருந்தார் சூரி. இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை பாகம் 2 படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உட்பட பலர் நடித்துள்ள இப்படம் வருகிற 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து விலங்கு வெப் சீரிஸ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை ‘கருடன்’ படத் தயாரிப்பாளர் லார்க் ஸ்டுடியோஸ் கே. குமார் தயாரிக்கிறார். இந்த நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஐஸ்வர்யா லட்சுமி சூரிக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் விஷாலின் ‘ஆக்ஷன்’ படம் மூலம் அறிமுகமான மலையாள நடிகையான ஐஸ்வர்யா லெக்ஷ்மி ‘ஜகமே தந்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’ படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.
கடைசியாக பொன் ஒன்று கண்டேன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது. இப்போது தமிழில் கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே சூரியுடன் நடிக்கவுள்ளதாக கூறப்படும் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.