அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி டில்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் ‘பிசினஸ்’ வகுப்பில் வயதான பெண் பயணித்தார். இரவில் விமானத்தில் விளக்கு அணைக்கப்பட்ட பின்னர், பிசினஸ் வகுப்பில் மற்றொரு இருக்கையில் பயணித்த சங்கர் மிஸ்ரா என்ற ஆண் பயணி மதுபோதையில் அந்த பெண் மீது சிறுநீர் கழித்தார். இந்த சம்பவம் ஜனவரி மாத தொடக்கத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா 30 நாட்கள் தங்கள் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்தது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய தகவல் கொடுக்காமல், பெண் பயணி மீது ஆண் பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தை சரியாக கையாளாத ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் 30 லட்ச ரூபாய் அபாராதம் விதித்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த டில்லி போலீசார் தலைமறைவாக இருந்த பயணி சங்கர் மிஸ்ராவை ஜனவரி 6-ம் தேதி பெங்களூருவில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சங்கர் மிஸ்ரா டில்லியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆண் பயணி சங்கர் மிஸ்ரா இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி டில்லி பாடியாலா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை இன்று விசாரித்த கோர்ட்டு, சங்கர் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.