அரியலூர் மாவட்டம், அரியலூர் அண்ணாசிலை அருகில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்தோற்று குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சார பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்தோற்றுகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஓட்டு வில்லைகளை ஆட்டோக்களில் ஓட்டி விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்-12ம் தேதி தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய இளைஞர் தினத்தை கொண்டாடும் விதமாக ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் அக்டோபர் 12-ந் தேதி வரை செஞ்சுருள் சங்க நிகழ்வுகளை தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மாவட்ட அளவில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக இன்றையதினம் அரியலூர் மாவட்டம், அரியலூர் அண்ணாசிலை அருகில் தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்தோற்று குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சார பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியானது அரியலூர் அண்ணாசிலை அருகில் தொடங்கி, அரியலூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காமராஜர் திடலில் முடிவடைந்தது. இப்பேரணியில் அரியலூர் அரசினர் கலை மற்றும் அறிவியில் கல்லூரி, கீழப்பழுவூர் விநாயகா கல்லூரி மற்றும் மீரா கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார்
300 மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் எச்.ஐ.வி தொற்று உள்ளவரும் நம்மவரே, எச்.ஜ.வி பற்றி தெரிந்து கொள்ள நம்பிக்கை மையம் செல்லுங்கள் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கிட்டும் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அஜிதா, இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.மாரிமுத்து, மாவட்ட திட்ட மேலாளர் சுமதி, அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு பணியாளர்கள், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் கீழ் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.