அரியலூர் மாவட்டம், அரியலூர் அண்ணாசிலை அருகில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்; மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்டம் கிளை சார்பில் “உரிமைப் பாதையில்” (Take the Rights Path) என்கிற கருப்பொருள் கொண்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து எச்.ஐ.வி / எய்ட்ஸ் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். மேலும், எய்ட்ஸ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினையும் துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 01 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுக்கவும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டவும் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்டுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்றையதினம் அரியலூர் மாவட்டம், அரியலூர் அண்ணாசிலை அருகில் உலக எய்ட்ஸ் தின
விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி துவக்கி வைத்தார்.
இப்பேரணியானது அரியலூர் அண்ணாசிலை அருகில் தொடங்கி, தேரடி, சத்திரம் பேருந்து நிறுத்தம் வழியாக சென்று நிர்மலா மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. இப்பேரணியில் இளையோர் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கத்தை சார்ந்த சுமார் 300 பள்ளி மாணவ, மாணவிகள் புன்னகையை பகிர்வோம் எய்ட்ஸை அல்ல, எச்.ஐ.வி பற்றி தெரிந்துகொள்ள நம்பிக்கை மையம் செல்லுங்கள், வருமுன் காப்போம் எய்ட்ஸ் இல்லாத உலகை படைப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பின்னர், அரியலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் “உரிமைப் பாதையில்”; (Take the Rights Path) என்கிற கருப்பொருள் கொண்ட கையெழுத்து இயக்கப் பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.
அதனைத்தொடர்ந்து அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பாக மருத்துவ சேவையாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும், எய்ட்ஸ் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.மாரிமுத்து, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் மணிகண்டன், மருத்துவம் ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்பநலம் துணை இயக்குநர் மரு.ராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மோகன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு (ம) கட்டுபாட்டு அலகு திட்ட மேலாளர் சுமதி, அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, ஐ.ஆர்.சி.எஸ் மாவட்ட செயலாளர் சண்முகம், ஐ.ஆர்.சி.எஸ் மாவட்ட தலைவர் ஜெயராமன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு பணியாளர்கள், செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் கீழ் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.