திருச்சி மாவட்டம் துவாக்குடி வாழவந்தான்கோட்டை முல்லை தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பாதுகாப்பு (செக்யூரிட்டி) பிரிவில் பணியாற்றிய நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இறந்து விட்டார். இதையொட்டி அவரது மனைவி ரேகா (38) வுக்கு ரூ. 30 லட்சம் கிடைத்துள்ளது. இந்த விவரமறிந்த, வாழவந்தான் கோட்டை பழைய பர்மா காலனியைச் சேர்ந்த எம் பி ராஜா (39), பெல்நகரைச் சேர்ந்த கோ. சமுத்திர பிரகாஷ் (39) இருவரும் சேர்ந்து, ரேகாவிடம் அந்த பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசைவார்த்தைகளைக் கூறி பெற்றுள்ளனர். மேலும் சுமார் 15 நகைகளையும் அவரிடம் பெற்றுள்ளனர்.
ஆனால் குறிப்பிட்டபடி பணத்தை இரட்டிப்பாக்கித் தரவில்லையாம். இது குறித்து ரேகா பலமுறை கேட்டும் பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இந்நிலையில் வியாழக்கிழமை ரேகா மீண்டும் அவர்களிடம் பணத்தை கேட்டுள்ளார். அவர்கள் தரமறுக்கவே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் சேர்ந்து ரேகாவை தாக்கியுள்ளனர். மேலும் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ரேகா துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸôர் வழக்குப் பதிந்து ராஜா, சமுத்திரபிரகாஷ் இருவரையும் வியாழக்கிழமை கைது செய்து 6 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். கைதான ராஜா அதிமுக திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட கலை பிரிவு செயலாளராகவும், சமுத்திரபிரகாஷ் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட நிர்வாகியாகவும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
