Skip to content
Home » கோவையில் ஏஐ தொழில் நுட்ப பூங்கா – முதல்வர் ஸ்டாலின் தகவல்

கோவையில் ஏஐ தொழில் நுட்ப பூங்கா – முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் 2 நாட்கள் நடைபெறும் Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

ஏஐ( AI) தான் இன்று பல இடங்களில் பேசுபொருளாக  உள்ளது. இந்த தொழில் நுட்பம் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகதான் செய்யும். AI தொழில்நுட்ப வளர்ச்சியால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் இந்த நேரத்தில்  இந்த மாநாடு அவசியமே. வணிகத்தையும், தொழில்நுட்பத்தையும் எப்போதும் ஊக்குவிக்கும் அரசாக திமுக அரசு திகழ்கிறது.

புத்தாக்கம் மற்றும் தொழில்  வளர்ச்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள புத்தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையில் அரசு செயல்படுகிறது. இன்னும் கூடுதலான வளர்ச்சியை நோக்கி தமிழகம் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.  எத்தனை வளர்ச்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டாலும் மேலும் வளர்ச்சி தேவை என்பது தான் எனது எண்ணம்

உண்மையான வளர்ச்சி என்பது சமச்சீரானதாக இருக்க வேண்டும்.  ஐ.டி துறை வளர மனித வளம் என்பது மிகவும் முக்கியமானது. 2-ம் கட்ட, 3-ம் கட்ட நகரங்களில் எல்காட்  தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொழில் சார்ந்த திறன்களை வளர்க்க ‘நான் முதல்வன் திட்டம்’ மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. நான் முதல்வன் திட்டத்தால் நம் மாநில இளைஞர்களின் Soft Skills வளர்ந்துள்ளது.

தமிழ் மென்பொருள் உருவாக்க மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.  மாநிலத்தின் அனைத்து திட்டங்களும்  இணையதத்தில் வழங்கப்பட வேண்டும். அதனால் மக்கள் பயனடைவர்.  இணைய சேவை எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறோம்.  சைபர் பாதுகாப்புக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சைபர் செக்யூரிட்டி, இணையத்தில் தமிழ் வழிக்கல்வி, தமிழ் வழி தேடுதலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

பல்வேறு திட்டங்கள் மூலம் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இனி மக்களின் எல்லா பயன்பாடுகளும் டிஜிட்டல் வழியாகவே அமையும்.  டிஜிட்டல் குற்றங்களை தடுக்க புதிய தொழில்நுட்பங்களை வடிவமைக்க வேண்டும்.

கோவையில் ஏஐ தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும்.

இவ்வாறு  முதல்வர் பேசினார்.  மாநாட்டில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.