Skip to content
Home » கோவை வேளாண் பல்கலை…. ஆன்லைன் விண்ணப்பம்….. தொடங்கியது

கோவை வேளாண் பல்கலை…. ஆன்லைன் விண்ணப்பம்….. தொடங்கியது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி வேளாண்மை இளம் அறிவியல், பட்டயப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்து விளக்கினார்.

‘120 ஆண்டுகால பழமை வாய்ந்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் 18 உறுப்புக்கல்லூரிகளும், 28 இணைப்பு கல்லூரிகளும் இயங்கி வருகிறது. கல்லூரிகளில் இளம் அறிவியல், டிப்ளமோ, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன் லைன் விண்ணப்ப இணையதளம் இன்று முதல் துவங்கப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை tnagfi.ucanapply.com என்ற ஒரே இணையதளத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து ஜூன் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் 14 படிப்புகளுக்கும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இரண்டு படிப்புகளுக்கும், மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் 9 படிப்புகளுக்கும், மூன்று விதமான டிப்ளமோ படிப்புகளுக்கும் மாணவர்கள் இந்த இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீடும், அக்ரி வோகேஷ்னல் படிப்பு படித்தவர்களுக்கு 5 சதவீதமும், மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இட ஒதுக்கீடு உள்ளது. இவை தவிர விளையாட்டு பிரிவு மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கான இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு சீட் என தல 20 சீட்டுகள் ஒதுக்கப்படுகிறது.

ஆன்லைன் விண்ணப்பம் முடிந்த பிறகு ரேங்கிங் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் கவுன்சலிங் நடத்தப்பட்டு மாணவர்கள் அந்தந்த பாடப்பிரிவில் சேர்க்கப்படுவார்கள்.

இதற்கான விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினருக்கு 600 ரூபாயும் எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கு 300 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ படிப்புகளுக்கு 200 ரூபாய் விண்ணப்ப கட்டணமும், எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 100 ரூபாய் விண்ணப்ப கட்டணம் உள்ளது.

இதேபோல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு ஜூன் 12-ம் தேதியோடு விண்ணப்பம் செயல்முறை முடிவடைகிறது. இதற்கு அடுத்து நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான தேர்வு நடைபெறும்.

AI தொழில்நுட்பம் வளர்ந்து வரும் சூழ்நிலையில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மைக்கான கருவிகள் ஆகியவற்றில் AI தொழில்நுட்பம் குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும், பழங்கள் மற்றும் காய்கறி அறுவடையிலும் ரோபோட்டிக் கருவிகள் பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேளாண் படிப்புகள் முடித்தவர்களுக்கு அரசின் பல்வேறு துறைகளிலும் குறிப்பாக வேளாண் துறையில் அதிக அளவில் வேலை வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி அக்ரி தொடர்பான அரசின் அமைப்புகள், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி, தர நிர்ணயம்என அக்ரி தொடர்பான வேலை வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

பொள்ளாச்சியில் ஏற்பட்ட இளநீர் தட்டுப்பாட்டுக்கான காரணங்களாக வறட்சி, வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் கேரள வாடல் நோய் ஆகியவை உள்ளன. இவற்றை எதிர்கொள்வதற்காகவும் நீர் மேலாண்மை குறித்தும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்கி  வருகிறது.

கோடை மழைப்  பொழிவு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிக குறைவாக இருந்தது. நாளை முதல் மூன்று நாட்களுக்கு நல்ல மழை பொழிவை எதிர்பார்க்கலாம், தென்மேற்கு பருவ கால மழைப்பொழிவு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும் .  இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக பயிர் அறுவடை செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!