ராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கூறியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் கேசி தியாகி கூறியதாவது: மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தால் வாக்காளர்களின் ஒரு பகுதியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து மக்கள் எழுப்பும் சந்தேகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட வேண்டும்.
இந்த திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. இது தேர்தலில் எதிரொலித்தது. இதில் நாங்கள் முரண்படவில்லை. அக்னிபாத் திட்டம் அமல்படுத்தப்பட்ட போது, ஆயுதப்படையினர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. அவர்கள் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அந்த திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட வேண்டும்.
பொது சிவில் சட்டம் குறித்து சட்ட கமிஷன் தலைவருக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். இந்த திட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் அனைவருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்பட வேண்டும். இது குறித்த எங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.