தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை வினோதினி கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்தார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வினோதினி மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வந்ததைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார். தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்திற்கும், கமல்ஹாசனுக்கும் ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்துக்களை கூறி வந்தார். இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. மக்கள் நீதி மய்யம் கேட்ட சீட்களை ஒதுக்க திமுக சம்மதிக்காத நிலையில், இறுதியாக 1 ராஜ்யசபா சீட் மட்டும் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்குவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என்றும், திமுக கூட்டணிக்கு ஆதரவாக 40 தொகுதிகளிலும் மநீம பிரச்சாரம் செய்யும் என்றும், அதற்கு கைம்மாறாக, கமல் ஹாசனின் மநீமவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்குவது என்றும் அறிவிக்கப்பட்டது. கமலின் இந்த முடிவுக்கு மநீம நிர்வாகிகள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வினோதினி வைத்தியநாதன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளிப்படையாகவே கமல்ஹாசனின் முடிவு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். “நாட்டு நலனுக்காக எடுத்த முடிவு இருக்கட்டும். அப்போ வீட்டு நலன்? உதயசூரியன்ல ஓட்டு குத்துங்கனு என்ன சொல்ல வையுங்க பார்ப்போம். நாட்டு நலனுக்காக பிரச்சார ஆதரவு சரி. வீட்டு நலனுக்காக (மநீம) ராஜ்ய சபாவைத் தவிர்த்திருக்கணும். லோக்சபா சீட் இல்லையென்றால் வெளியிலிருந்து ஆதரவு மட்டுமே என்பதுதான் நியாயமானது. காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்டுள்ள 9 இடங்களில் ஒன்று எங்களுக்கு வந்திருக்கணும். இது அவர்களாகவே எங்களுக்கு குறைந்தபட்சம் செய்திருக்க வேண்டும். எவ்வளவு gaslight பண்ணினாலும் இதுதான் என் கருத்து. என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.