Skip to content
Home » பொங்கல் பண்டிகை முடிந்து……திருச்சி பஸ் ஸ்டாண்டில் அதிகரித்த மக்கள் கூட்டம்…

பொங்கல் பண்டிகை முடிந்து……திருச்சி பஸ் ஸ்டாண்டில் அதிகரித்த மக்கள் கூட்டம்…

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சொந்த ஊரிலிருந்து ஏராளமானோர் புறப்பட்டதையடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், பயணிகள் கூட்டமும் அதிகளவில் காணப்பட்டது. நிலையத்துக்குள் நுழைய முடியாமல் பேருந்துகள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.
பொங்கல் பண்டிகை நிகழாண்டில் ஒருவாரகாலம் விடப்பட்டது. ஜனவரி, 11 12 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை. அடுத்ததாக 14 ஆம் தேதி பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல் என வரிசையாக 16 ஆம் தேதி வரை பொங்கல் விடுமுறையாகும். இதில் ஜனவரி 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஒருநாள் விடுப்பு அறிவித்தால் வாரத்தில் சனி, ஞாயிறு என வாரத்தில் 6 நாள்களும், ஜனவரி 13 ஆம் தேதியும் விடுப்பு எடுத்தவர்களுக்கு வாரம் முழுவதும் விடுமுறையாகி விடும். எனவே பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டன. இதனையடுத்து அரசு விடுமுறை அளித்தது. பதிலாக ஜனவரி 25 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக ஈடுசெய்யப்படும் எனவும் அரசு அறிவித்ததால் வாரம் முழுவதுமாக பொங்கல் பண்டிகை விடுமுறையாக அமைந்தது.

எனவே பணி, கல்வி மற்றும் பல்வேறு காரணங்களால் வெளியூர்களில் தங்கியுள்ள பொதுமக்கள், மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மேலும் சிலர் திங்கள்கிழமை இரவிலும் சொந்த ஊர் புறப்பட்டனர். பின்னர் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்த நிலையில் சனி, ஞாயிறு கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்ட பலரும் வெள்ளிக்கிழமை பிற்பகலே ஊர் புறப்பட்டனர். தமிழக அரசும் பொங்கல் பண்டிகையை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகளை இயக்கியுள்ள நிலையில், மாநிலத்தின் மையப் பகுதி திருச்சி என்பதால், வெள்ளிக்கிழமை பிற்பகலிலிருந்தே திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் மேலும் அதிகரித்தது.

கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதாலும், பயணிகள் கூட்டம் அதிகரிப்பாலும் மத்திய பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் நுழையவே முடியவில்லை. இதனால் மணப்பாறை மார்க்கத்திலிருந்து வந்து மத்திய பேருந்து நிலையத்துக்குள் நுழையவேண்டிய பேருந்துகள் அரிஸ்டோ மேம்பாலம் தொடங்கி மிளகுபாறை பிரதான சாலை, பேருந்து நிலையத்துக்கு செல்லும் சாலை, பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள வ உ சி சாலைகளில் பேருந்துகள் நீண்ட தொலைவுக்கு அணி வகுத்து நின்றன. மேலும் கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை என அனைத்து பகுதிகளிலிருந்து வந்த பேருந்துகளும், ஜங்ஷன் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளிலும் நின்று நின்று சென்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி நிலவியது.

சனி, மற்றும் ஞாயிறு கிழமைகளில் இச்சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருக்கும் என்பதால், போலீஸôர் மாற்று வழிகளை கையாள்வது வழக்கம். வெள்ளிக்கிழமை என்பதால் யாரும் எதிர்பாராத சூழலில் கூட்டம் நிரம்பியதால், மத்திய பேருந்து நிலையப் பகுதியில் எங்கு பார்த்தாலும் கூட்டம் அலைமோதியது.