Skip to content
Home » ஆஸ்திரேலியாவை வெளியேற்றி வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்..

ஆஸ்திரேலியாவை வெளியேற்றி வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்..

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது. சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில் ஆஸ்திரேலிய அணியை அரை இறுதி சுற்றுக்கு முன்னேற விடாமல் செய்ததோடு கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக உலகக் கோப்பை அரை இறுதிக்கு ஆப்கானிஸ்தான் முன்னேறியது.

வங்கதேச அணிக்கு எதிரான கடைசி சூப்பர் 8 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த சாதனையை செய்துள்ளது. முன்னதாக சூப்பர் 8 சுற்றில் முதல் பிரிவில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை நேற்று வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறி இருந்தது. இதை அடுத்து வங்கதேச அணி, ஆப்கானிஸ்தானை வீழ்த்தி குறைந்த நெட் ரன் ரேட் பெற்றால் மட்டுமே ஆஸ்திரேலியா அணி அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்ற சூழ்நிலை இருந்தது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி மிகவும் நிதானமாக ஆடி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் துவக்க வீரர் ரஹ்மானுல்லா 55 பந்துகளில் 43 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அடுத்து வங்கதேச அணி பேட்டிங் ஆடியது.

12.1 ஓவரில் 116 ரன்கள் இலக்கை எட்டினால் வங்கதேசம் அணி அதிக நெட்ரன் ரேட் பெற்று ஆஸ்திரேலியாவை முந்தி அரை இறுதிக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது. அதற்கு ஏற்ப அந்த அணி முதல் 2 ஓவர்களில் 18 ரன்கள் எடுத்து இருந்தது. ஆனால், அதன் பின் வங்கதேச அணி விக்கெட்களை இழக்கத் தொடங்கியது. அந்த அணி சரியாக 11.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. சில நிமிடங்கள் கழித்து போட்டி மீண்டும் தொடங்கியது. அப்போது வங்கதேச அணி 19 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

ஏற்கனவே அதிக விக்கெட்களை இழந்து இருந்த வங்கதேச அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. டிஎல்.எஸ் முறைப்படி ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 27ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை சந்திக்க உள்ளது ஆப்கானிஸ்தான். இந்திய அணி இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!