Skip to content
Home » நடுவானில் விமானத்தில் பெண்ணிற்கு பிரசவ வலி….. பரபரப்பு..

நடுவானில் விமானத்தில் பெண்ணிற்கு பிரசவ வலி….. பரபரப்பு..

  • by Senthil

சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 179 பயணிகளுடன் புறப்பட்டது.  இதில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த தீப்திசரிசு (28) என்கிற பெண்ணும் குடும்பத்தினருடன் பணித்துள்ளார்.  நிறைமாத கர்ப்பிணியான இவர் குடும்பத்தினருடன் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.  விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது தீப்திசரிசுவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதனையடுத்து  தீப்தியின் குடும்பத்தினர், விமான பணிப்பெண்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். உடனடியாக தலைமை விமானிக்கும், சென்னையில் உள்ள விமான கட்டுப்பாடு அறைக்கும் விமான பணிப்பெண்கள் தகவல் கொடுத்தனர். பின்னர் தீப்தி அமர்ந்திருந்த இடத்தில் இருந்த ஆண் பயணிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு, உடனடியாக விமானத்தில் திரை தடுப்பை கட்டியுள்ளனர். தொடர்ந்து விமானத்தில் பயணித்த மருத்துவர் மற்றும் மற்ற பெண் பயணிகளின் உதவியோடு தீப்திக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. விமானம் நடு வானில் பறந்துகொண்டிருந்தபோதே தீப்திக்கு ஆண் குழந்தை பிறந்தது.

பரபரப்பான சூழலில்  இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கு ஏற்கனவே விமான நிலைய மருத்துவ குழுவினர், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் விமானம் வந்து தரையிறங்கும் இடத்தில் தயார் நிலையில் இருந்தனர்.  உடனடியாக மருத்துவக் குழுவினர் விமானத்துக்குள் ஏறி தாயையும் குழந்தையும் பரிசோதித்தனர். அதோடு  தாயையும் குழந்தையும் விமானத்திலிருந்து இறக்கி, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னரே விமானத்தில் உள்ள மற்ற பயணிகள் விமானத்தில் இருந்து கீழே இறங்க அனுமதித்தனர். இதனிடையே  தீப்தியின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியுடன், விமானத்தில் பயணித்த  பயணிகளுக்கு சாக்லேட் வழங்கி மகிழ்ந்தனர்.  இந்த சம்பவத்தால்  இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!